அருப்புக்கோட்டை வரலாறு
தமிழகத்தின் மிகவும் பழம்பெருமை வாய்ந்த சிறப்புமிக்கது அருப்புக்கோட்டை நகரமாகும்.விருதுநகர் மாவட்டத்தில் முதல்நிலை ஊராட்சியாகத் திகழும் அருப்புக்கோட்டை நகரின் அமைவிடம் 9.520 N, 78.10 E ஆகும். கடல்மட்டத்தில் இருந்து 318 அடி(சராசரியாக 97 மீட்டர்) உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. அருப்புக்கோட்டை நகர் குறித்து பல்வேறு பழமையான தகவல்களை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நம்முடைய நகரின் சொக்கலிங்கபுரம் பகுதியின் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில், சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. இக்கல்வெட்டுக்களில்‘’செங்காட்டிருக்கை’’எனஅருப்புக்கோட்டைநகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் “இடத்துவளி“ என இன்னொரு பகுதியும் இருந்தது, என்ற குறிப்பும் அக்கல்வெட்டில் உள்ளது.இவ்விரண்டு பகுதிகளையும் சேர்த்து செங்காட்டிருக்கை இடத்துவளி என்று அழைக்கப்பட்டதாகவும் கல்வெட்டு கூறுகிறது.
இன்றும் நகரின் வடகிழக்கில் உள்ள “செங்காட்டூரணி“ என்ற ஊரணிகுளம் நம் நகரின் பழைய பெயரை நினைவூட்டி நிற்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் பல வணிகத் தெருக்கள் பெருந்தெரு என்ற பெயரில் இருந்துள்ளதாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
1.விக்கரமபாண்டியன் பெருந்தெரு 2.வீரபாண்டியன் பெருந்தெரு 3.பழிவிலங்கிப் பெருந்தெரு 4.சீவல்லவப் பெருந்தெருவான தேசியாசிரியப் பட்டணம் ஆகியன நகரில் இருந்த சில பெருந்தெருக்கள் என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
இலுப்பையூர், சிறுமணக்குளம், பெரியமணக்குளம், பெருநாங்கூர், பூங்கால், காரையிருக்கை வெண்மில் வாழையூரான பூலோக சுந்தர நல்லூர் ஆகிய சிற்றூர்கள் அருப்புக்கோட்டை நகரைச் சுற்றி இருந்ததாகக் கல்வெட்டு அறிவிக்கிறது.
சுமார் 400 வருடங்களுக்கு முன் மதுரையை ஆண்ட வீரப்பநாயக்கர் ஒரு கோட்டையை இங்கு கட்டினார். அதனை ‘அரவக்கோட்டை’ என்று அப்பொழுது அழைத்து வந்தனர். அந்த‘’அரவக்கோட்டையே’’ காலப்போக்கில் ‘’அருப்புக்கோட்டையாக’’ மாறியது என்று தொல்பொருள் ஆய்வுத்துறையின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அருப்புக்கோட்டையைச் சுற்றி மல்லிகை பூந்தோட்டங்கள் கோட்டை போன்று அமைந்திருந்ததால் அரும்புக்கோட்டை என்று முன்னொரு காலத்தில் நம்நகரை அழைத்தனர். காலப்போக்கில் அரும்புக்கோட்டை என்ற பெயர் மருவி அருப்புக்கோட்டையாக மாறியது என செவிவழிச் செய்தியாக கூறப்படுவதும் உண்டு.
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி அருப்புக்கோட்டைநகராட்சியில் 83,999பேர் வசிக்கின்றனர். இவர்களில் 41,959 பேர் ஆண்கள். 42,040 பேர் பெண்கள். இவர்களில் ஆறு வயதிற்குட்பட்டோர்களின் எண்ணிக்கை 7,834. இவர்களில் ஆண்கள் 3978. பெண்கள் 3856. நகரில்கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 66,460 பேர். இவர்களில் 35,783 பேர் ஆண்கள். 30,677 பேர் பெண்கள்.